கார் மீது லாரி மோதி பயங்கரம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 
accident accident

பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே கார் மீது லாரி மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனபால்(37), தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தின் வீரியத்தால் கார் உருக்குலைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே நான்கு உயிர்கள் பறிபோனது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் தனபால், அவரது மனைவி மேனகா(35), மகள் கனிஷ்கா(17) மற்றும் உறவினர் சினேகா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் காரின் இரும்புப் பாகங்களை வெட்டி எடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்தில் 12 வயது சிறுவன் சுர்ஜித் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினான். படுகாயமடைந்த அந்தச் சிறுவனை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நெகமம் போலீசார், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.