லாரி - கார் நேருக்கு நேர் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 
accident accident

 பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கார்த்திக்குக்குத் திருமணம் நடைபெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதற்கான பரிகார பூஜை செய்வதற்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோயிலுக்குக் குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஸ்ரீரங்கத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரியும் மருமகன் பாலசுப்பிரமணியன் என்பவரது காரில் குடும்பத்தினர் அனைவரும் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஆம்புலன்ஸ்

 கோயிலில் பரிகார பூஜைகளை நல்லபடியாக முடித்துவிட்டுத் தங்களது சொந்த ஊரான வெள்ளனூர் கிராமத்திற்கு முசிறி - துறையூர் சாலை வழியாகக் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் ஜம்புநாதபுரம் அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காஞ்சிபுரத்திலிருந்து பாதுகாப்பு காலணிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாகக் கார் மீது மிக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக அப்பளம்போல் நொறுங்கிப் போர்க்களமாக மாறியது.

 இந்த கொடூர விபத்தின் இடிபாடுகளில் சிக்கி கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன், அவரது மனைவி கவிதா, மைத்துனர் கார்த்திக் மற்றும் மாமனார் முருகேசன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரச் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநர் ஞானசூரியனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.