#BREAKING: டெல்லியில் உணவகத்தில் பயங்கர தீ விபத்து... 20 பேர் உடல்கருகி பலி; பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

 
டெல்லி டெல்லி

டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் எதிர்பாராத விதமாகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் உணவகத்திற்குள் இருந்த 20 பேர் புகையில் மூச்சுத்திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உணவக கட்டிடத்தின் பல பகுதிகளுக்குத் தீ மிகவும் வேகமாகப் பரவியதால் அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனதே இந்த பெரும் சோகத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் 40 பேர் வரை அந்த உணவகக் கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குப் பல வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்துள்ளனர். அவர்கள் பெரும் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உணவகத்தின் சமையல் அறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.