அடுத்தடுத்து சாலை விபத்துகள்... தமிழகத்தில் ஒரே நாளில் 16 பேர் பரிதாப பலி!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர சாலை விபத்துகளில் சிக்கி மொத்தம் 16 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். விழுப்புரம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த செல்வம், செல்லப்பாண்டி, கவிதா ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே சக்தி என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி மோதியதில் வெற்றிவேல், சுஜாதா உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் மோகன் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது மத்தூர் அருகே லாரி மோதிய விபத்தில் அவரும் அவரது மகள் அஸ்விகாவும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பரமசிவன் மற்றும் பாரதி ஆகியோர் பைக் மீது கார் மோதிய விபத்தில் சங்கரன்கோவில் அருகே உயிரிழந்தனர். ராசிபுரம் அருகே ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற நண்பர்களான சுகனேஸ்வரன் மற்றும் முத்தமிழ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு இறந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலைப்பாதையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது மகள் அனுஷ்கா ஆகியோர் வந்த பைக் மீது கனரக லாரி மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி இருவரும் பலியாயினர். காரியாபட்டி அருகே மாரிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டூவீலரில் சென்றபோது கார் மோதிய விபத்தில் மாரிமுத்து மற்றும் 10 வயது சிறுமி சவுமியா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தொடர் விபத்துகளில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
