இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து பயங்கர விபத்து... 4 பேர் பரிதாப பலி!

 
aandra

ஆந்திர மாநிலம் பிரதிபாடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மிகக் கொடூரமான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள போயபாலேம் அருகே டீசல் தீர்ந்துபோன காரணத்தால் லாரி ஒன்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி, நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க அதன் ஓட்டுநர் வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் அந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

திருப்பதி ஆம்புலன்ஸ்

கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த சாலைத் தடுப்பை மிக வேகமாகத் தாண்டி எதிரே பாய்ந்தது. அதே நேரத்தில் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது இந்த லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோரமான மோதலின் வேகத்தில் இரண்டு லாரிகளும் அடுத்த சில வினாடிகளில் முற்றிலும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. லாரிகளில் இருந்த எரிபொருள் தொட்டிகள் வெடித்ததால் தீ மளமளவெனப் பரவி இரண்டு லாரிகளையும் முழுமையாகச் சூழ்ந்துகொண்டது.

இந்தத் தீ விபத்தில் சிக்கிய 2  லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் 2 கிளீனர்கள் என மொத்தம் 4  பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரிகள் நடுச்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி லாரிகளில் எரிந்த தீயை முழுமையாக அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களைச் சாலையிலிருந்து அகற்றிய பின்பு அந்தப் பகுதியில் போக்குவரத்து மெதுவாகச் சீரடைந்தது.