ஆம்னி பேருந்து - டிராக்டர் மோதி பயங்கர விபத்து... நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் பரபரப்பான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியில் அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்தும் எதிரே வந்த டிராக்டரும் திடீரென நேருக்கு நேர் கொடூரமாக மோதிக் கொண்டன. இந்தக் கோர விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்தவுடன் ஆம்னி பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். தேசிய நெடுஞ்சாலையில் நின்ற இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்து சாலையின் குறுக்கே நின்றதால் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கத் தொடங்கின. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சாலையில் குறுக்கே கிடந்த விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பு வாகனங்கள் மூலம் மீட்டுச் சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஸ்தம்பித்த போக்குவரத்து மீண்டும் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வாகனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கின.
