டிராக்டர் மீது லாரி மோதி 8 பேர் பலி, 32 பேர் படுகாயம்!
மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு விட்டு கூலித் தொழிலாளர்கள் சிலர் டிராக்டர் ஒன்றில் தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதிக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது. அந்த வாகனம் அதிகாலை 1 மணியளவில் பிந்த் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிம்கா கிராமம் அருகே வந்தபோது சாலையில் கால்நடைகள் படுத்திருந்தன.

இதனால் டிராக்டர் ஓட்டுநர் அவற்றின் மீது மோதி விடாமல் இருக்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் எதிர் திசையில் சென்றது. அப்போது எதிரே வந்த லாரி மீது அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் சிகிச்சை பலனின்றிப் பலியானார்கள்.
தவிர இந்த கோர விபத்தில் 32 பேர் வரை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரப் பயணங்களின் போது ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
