அரசுப் பேருந்தை முந்திய ஸ்கூட்டர் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் தாயும் மகளும் பரிதாப பலி!
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிளாம்பாக்கம் அடுத்த கீரப்பாக்கத்தில் வசித்து வருபவர் தேவி (45), இவரது மகள் சுவாதி (23). இருவரும் ஸ்கூட்டரில் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். காரணை புதுச்சேரி கிராமப் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த தாய் தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மகள் சுவாதியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளம் பெண்ணும் அவரது தாயும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பள்ளிப் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
