மாணவர்களுக்கு இலவச உணவுடன் தங்குமிடம்... 18 விடுதிகள் தயார் - தமிழக அரசு அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

சென்னை மாவட்டத்தில் தங்கிப் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் கல்லூரி மாணவர்களுக்காக மொத்தம் 18 நவீன அரசு விடுதிகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய புதிய கல்வி ஆண்டிற்கு இந்த விடுதிகளில் தங்கிப் படிப்பதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு , பட்டமேற்படிப்பு , தொழிற்பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் (Polytechnic) போன்ற படிப்புகளில் பயிலும் தகுதியான மாணவ, மாணவியர் எவ்விதக் கட்டணமுமின்றி இந்த விடுதிகளில் சேர்ந்து பயனடையலாம்.

விண்ணப்பம்

என்னென்ன சலுகைகள் இலவசம்?

இந்த அரசு விடுதிகளில் சேரும் மாணவ, மாணவியருக்குத் தங்குவதற்குப் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் நாள்தோறும் சுவையான, சத்தான மூன்று வேளை உயர்தர உணவு முற்றிலும் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். இதுதவிர, மாணவர்களின் கல்விக்குத் தேவையான இதர அடிப்படை வசதிகளும் இங்கு செய்து தரப்படும்.

சேர்க்கைக்கான முக்கிய நிபந்தனைகள்:

விண்ணப்பிக்கும் மாணவர்களின் சொந்த ஊர் அல்லது இல்லம் இருக்கும் பகுதியானது, அவர்கள் சென்னையில் பயிலும் கல்வி நிலையத்தின் தூரத்திலிருந்து குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். ஆனால், இந்த 8 கி.மீ தூரக் கட்டுப்பாட்டு விதிமுறையானது மாணவிகளுக்கு முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் எவ்வித தூர நிபந்தனையுமின்றி விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் கல்லூரி

விண்ணப்பங்கள் பெறுமிடம்:

இந்த இலவச திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவ, மாணவியர், தங்களுக்குக் அருகாமையில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு விடுதி காப்பாளர்கள் அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் "மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை" நேரடியாக அணுகி விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த சான்றிதழ் ஆவணங்களுடன் உரியக் காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.