நெல்லையில் சாதனை... அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் சாதித்த 3 சகோதரர்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை நெசவாளரின் மகன்கள் 3 பேர் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று, ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியினரின் மகன்கள் வெங்கட் ஸ்ரீ மற்றும் இரட்டையர்களான அருண், தரண்.
ராம்குமார் தனது 3 மகன்களையும் வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை அவர்களிடம் விதைத்து ஊக்கப்படுத்தி வந்தார்.

மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ: 2022-23-ல் பிளஸ்-2 முடித்த வெங்கட் ஸ்ரீ, தொடர் முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நீட் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றார். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய இரட்டை சகோதரர்கள் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூவருக்கும் இடங்கள் கிடைத்துள்ளன:
அருண்: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி,தரண்: கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, வெங்கட் ஸ்ரீ நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரி என சேர்ந்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற சவுராஷ்டிரா சங்கத்தின் 45-வது ஆண்டு விழாவில், திருநெல்வேலி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர், சவுராஷ்டிரா சங்கத் தலைவர் ராம்தாஸ் ஆகியோர் இந்த 3 சகோதரர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுத் தொகை வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
