தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் - வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறை திருத்தப் பணிகளை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் (நவம்பர் 21), நாளையும் (நவம்பர் 22) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
வரும் ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்களது பெயரைப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளலாம் (படிவம் 6).

உயிரிழந்தவர்கள் அல்லது நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கும் (படிவம் 7), பெயர், வயது, பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் (படிவம் 8) இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை: இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேவையான விண்ணப்பப் படிவங்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள். பொதுமக்கள் தங்களது உரிய ஆவணங்களுடன் (வயதுச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) நேரில் சென்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேலும், நேரில் செல்ல முடியாதவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (voters.eci.gov.in) மற்றும் 'Voter Helpline' செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
