‘துரோகி எடப்பாடி’ கோஷமிட்ட தொண்டர்கள்... திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்!
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.
இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்த ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ், திமுகவின் அடிப்படை உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் உறுப்பினரானார். ஓ.பி.எஸ் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோது, அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் "துரோகி எடப்பாடி" என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இது அங்கிருந்த அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய ஒருவர், அக்கட்சியின் பரம்பரை எதிரியாகக் கருதப்படும் திமுகவில் இணைந்திருப்பது, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் நிலவி வந்த தலைமைப் போராட்டத்தினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், தனது சட்டப் போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் களத்தில் கடும் சவால் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
