நடிகர் அஜய் தேவ்கனின் பங்களாவில் சலூன் மற்றும் ஸ்பா - மாநகராட்சி நோட்டீஸ்!
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், மும்பையில் தனக்குச் சொந்தமான பங்களாவில் வணிக ரீதியிலான சலூன் மற்றும் ஸ்பா தொடங்கும் முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் அங்குள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் அஜய் தேவ்கன் தனக்குச் சொந்தமான அந்தச் சொத்தை, கடந்த 5 ஆண்டுகளுக்கு மொத்த வாடகை ஒப்பந்தமாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.10.61 கோடிக்கு வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பங்களாவின் ஒரு பகுதியைச் சலூன் மற்றும் ஸ்பா (Saloon & Spa) தொடங்க வாடகைக்கு விட்டதைத் தொடர்ந்து, அங்குப் பல்வேறு கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியிருப்புப் பகுதியில் இதுபோன்று வணிகப் பணிகள் நடைபெறுவதற்கு அப்பகுதி வாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முறையான அனுமதியின்றி குடியிருப்புப் பகுதியில் வர்த்தகப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டனர். இதனையடுத்து, அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி நடிகர் அஜய் தேவ்கனுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
