‘ஓபிஎஸ் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ - தவெக-வில் இணைந்த நடிகர் பஷீர் பேட்டி!

 
ஜெயலலிதா ஓபிஎஸ்

"முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு, முறைப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும்" என்று பிரபல நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜே.எம்.பஷீர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று நடைபெற்று வரும் 'மாற்றுக் கட்சியினர் இணையும் விழா'-வில், நடிகர் ஜே.எம்.பஷீர் தவெக-வில் முறைப்படி இணைந்தார். அவருக்குக் கட்சியின் தலைவர் விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். கட்சியில் இணைந்த சில நிமிடங்களிலேயே செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.எம்.பஷீர், தனது மகிழ்ச்சியையும் புதிய அரசியல் வியூகத்தையும் வெளிப்படுத்தினார்.

ஓபிஎஸ்

"தமிழ்நாட்டின் மாற்று அரசியலாகவும், மக்கள் நலன் காக்கும் அரணாகவும் விளங்கும் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது." திமுக, அதிமுகவிலிருந்து பல முக்கியத் தலைவர்கள் தவெக-விற்குத் தாவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், ஓபிஎஸ்-இன் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஜே.எம்.பஷீர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தற்போதைய தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டுத் தவெக-வில் இணைய வேண்டும். அவர் மட்டும் தவெக பக்கம் வந்தால், ஒட்டுமொத்த உண்மையான அதிமுக தொண்டர்களும், அந்த இயக்கமும் அப்படியே தவெக பக்கம் வந்தது போல் ஒரு பிரம்மாண்ட அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் நிகழும்" என்றார்.