”10-ல் 8 பேருக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியவில்லை” - நடிகர் தனுஷ் வேதனை!

 
தனுஷ்

சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்குத் தனது சொந்தச் செலவில் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்துத் திறந்து வைத்த நடிகர் தனுஷ், தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உருக்கமாகப் பேசினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது பழைய பள்ளியில் 3 தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடத்தை நடிகர் தனுஷ் தனது சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். தனுஷின் இந்த உதவியைப் பாராட்டி, அந்த புதிய கட்டடத்திற்குப் பள்ளி நிர்வாகம் 'தனுஷ் பிளாக்' எனப் பெயரிட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் நடிகர் தனுஷ், அவரது பள்ளித் தோழரும் ஒளிப்பதிவாளருமான குமரன் மற்றும் 1999-ம் ஆண்டு ஒன்றாகப் படித்த சக நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். "நாங்கள் படித்த காலத்தில் தவறாக ஆங்கிலம் பேசினாலும் தமிழ் நன்றாகத் தெரியும். ஆனால், இப்போது 10-ல் 8 பேருக்குத் தமிழ் எழுத, படிக்கவே தெரியவில்லை. ஆங்கிலத்தில் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இது மிகவும் வருத்தமான விஷயம்" என தனுஷ் வேதனை தெரிவித்தார்.

தாய்

"உங்களுக்கு முதலில் உங்கள் தாய்மொழி தான் தெரிந்திருக்க வேண்டும். அதை எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். 'எனக்குத் தமிழ் வரவில்லை' என்று சொல்வது பெருமை அல்ல; அது ஒரு அவமானம்" எனக் குறிப்பிட்டார்.

"நான் பெல்ஜியத்தில் ஒரு பிரெஞ்சுப் படத்தில் நடித்த போது ஆங்கிலம் தெரியுமா எனக் கேட்டார்கள். தெரியும் என்றதும் ஆச்சரியப்பட்டார்கள். 'உங்களுக்கு உங்கள் தாய்மொழி தானே தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் என்பது உங்களுக்கு போனஸ் தானே?' என்று அவர்கள் கூறியதை" மேடையில் தனுஷ் சுட்டிக்காட்டினார்.