நடிகர் தனுஷுக்கு தேசிய விருது... சிறந்த தமிழ்ப் படமாக 'ராயன்' தேர்வு - ‘அமரன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷுக்கு விருது!

 
தனுஷ்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் வெளியான தகுதிவாய்ந்த திரைப்படங்களை ஆராய்ந்து இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய அங்கீகாரமும் பெருமையும் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2024-இல் வெளியான த்ரில்லர் திரைப்படமான 'ராயன்', இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வட சென்னை பின்னணியில் அண்ணன் - தம்பிகளின் பாசப் போராட்டத்தையும், பழிவாங்கலையும் மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், வணிக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றதுடன் தற்போது தேசிய அளவிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளது.

'ராயன்' படத்திற்கான சிறந்த தமிழ்ப் பட விருது ஒருபுறமிருக்க, நடிகர் தனுஷுக்கு இந்தத் தேசிய விருது அறிவிப்பில் மற்றுமொரு இரட்டைப் பெருமை கிடைத்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்காக, அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பாராட்டு விருது  வழங்கப்பட்டுள்ளது. அடிமைத்தனம் மற்றும் சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் புரட்சிகரமான கதாபாத்திரத்தில் தனுஷ் வெளிப்படுத்திய நடிப்புத் திறனைப் பாராட்டி இந்தத் தகுதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமூக அக்கறைக்கான அங்கீகாரம்: மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேசிய 'கேப்டன் மில்லர்' திரைப்படம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை/தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படங்களுக்கான வரிசையிலும் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே 'ஆடுகளம்' (2011) மற்றும் 'அசுரன்' (2019) ஆகிய திரைப்படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை வென்றுள்ள தனுஷ், தற்போது தனது 50-மாவது படமான 'ராயன்' மூலம் இயக்குநராகவும் தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளார். ஒரே ஆண்டில் தான் இயக்கிய படத்திற்குச் சிறந்த தமிழ்ப் பட விருதும், தான் நடித்த மற்றொரு படத்திற்குச் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் பெற்றுள்ள தனுஷின் இந்த அசுரச் சாதனைக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.