நடிகர் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவிக்கு அரிவாள் வெட்டு - 18 பேர் மீது வழக்குப்பதிவு - உடன்குடியில் இருதரப்பினர் மோதல்!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கோவில் கட்டுவது தொடர்பான முன்பகையில் ஏற்பட்ட மோதலில், பிரபல யூடியூபரும் நடிகருமான ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி உள்ளிட்ட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல யூடியூபரும், திரைப்பட நடிகருமான ஜி.பி.முத்து. ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக, அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்டநாட்களாக முன்பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பாக எதிர் தரப்பினர் கோழியை அறுத்துப் பலி கொடுத்துப் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. கோழி பலியிட்டதை ஜி.பி.முத்துவின் குடும்பத்தினர் தட்டிக்கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது கைக்கலப்பாக மாறியது.
ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில், ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா மற்றும் உறவினர் இளையபெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் இரு தரப்பினரின் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தம்மை பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கியதாக எதிர் தரப்பு அளித்த புகாரின் பேரில், நடிகர் ஜி.பி.முத்து, அவரது தந்தை கணேசன், மனைவி அஜிதா, தம்பி மனைவி அனிதா, உறவினர் இளையபெருமாள், வேல்முருகன் மற்றும் ஜி.பி.முத்துவின் குழந்தைகள் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
