நடிகர் இம்ரான் கான் அக்.28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

 
இம்ரான்

பாலிவுட் பிரபல நடிகர் ஆமிர் கானின் மருமகனும், நடிகருமான இம்ரான் கான், இந்தியாவில் நடைபெற்ற அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வரும் அக்டோபர் 28-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டவர் மற்றும் OCI விதிகளுக்குப் புறம்பாக இவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதியன்று, மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியல் சீரமைப்பு விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இம்ரான் கான் கிரித் சோமையா

இந்த போராட்டத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் கான், தனது காதலி லேகா மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டார். முன்னதாக, உரிய அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இம்ரான் கான் உட்பட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்தனர்.

இதற்கிடையே, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் இந்தியாவில் அரசியல் போராட்டங்களில் எப்படிப் பங்கேற்கலாம் என்று கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் கிரிட் சோமையா, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நடிகர் இம்ரான் கான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்பதும், இந்தியாவில் தங்கி பயணிப்பதற்காக அவர் OCI அட்டையைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி

இந்தியச் சட்டங்களின்படி, OCI அட்டை வைத்துள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் இந்தியாவில் வசிப்பதற்கான உரிமைகள் இருந்தாலும், அவர்கள் நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டங்களிலோ அல்லது அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதற்குச் சட்டப்பூர்வமாக எந்த அனுமதியும் கிடையாது.

வெளிநாட்டுப் பிரஜையாக இருந்து கொண்டு இந்தியாவில் அனுமதியின்றி அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம், OCI விதிகளையும் குடிவரவு சட்டத்தின் நிபந்தனைகளையும் இம்ரான் கான் மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, அவர் வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ஒருவருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.