நடிகர் இம்ரான் கானை நாடு கடத்த வேண்டும் - பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா வலியுறுத்தல்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் இம்ரான் கானை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள நடிகர் இம்ரான் கான், இந்தியாவில் இதுபோன்று அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும், சட்ட விதிமீறல்களில் பங்கேற்கவும் சட்டப்படி அனுமதியுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய கிரித் சோமையா, இதுகுறித்து மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, தான் எந்தவொரு அமைப்பையும் அல்லது கட்சியையும் சேராத சாதாரண குடிமகன் என்றும், எந்தத் தவறும் செய்யாத தன்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்றும் காவல்துறையினரிடம் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்டு, தற்போது இவர்களது குடியுரிமை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
