அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் குண்டு கல்யாணம் தீவிர பிரசாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் அதிமுக தனது பலத்தைக் காட்டி வருகிறது. அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து, அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும் நடிகருமான குண்டு கல்யாணம் நேற்று அதிரடிப் பரப்புரையில் ஈடுபட்டார்.
நேற்று இரவு சூலூர் தொகுதியில் உள்ள முத்துக்கவுண்டன்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், திறந்த வாகனத்தில் சென்றபடி அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடனும், உற்சாக முழக்கங்களுடனும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவின் நீண்டகால ஆதரவாளரான நடிகர் குண்டு கல்யாணம், வேட்பாளருடன் வாகனத்தில் சென்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். தனது பாணியில் நகைச்சுவை கலந்தும், அதேசமயம் எதிர்க்கட்சிகளைச் சாடியும் அவர் பேசிய பேச்சு தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

பரப்புரையின் போது பேசிய வேட்பாளர் வி.பி. கந்தசாமி, "மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்று, பின்னர் மக்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். சூலூர் தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், தொகுதியைத் தமிழகத்திலேயே முதன்மைத் தொகுதியாக மாற்றவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். நட்சத்திரப் பேச்சாளர்களின் வருகையால் சூலூர் தொகுதி அதிமுக வட்டாரத்தில் கூடுதல் தெம்பு பிறந்துள்ளது.
