'விவசாயி'யாக மாறிய நடிகர் மாதவன்... தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றிக் காட்டி பெருமிதம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பயனற்றுக் கிடந்த தரிசு நிலத்தை வாங்கி, அதனை ஒரு பசுமையான தென்னந்தோப்பாக மாற்றிக் காட்டி நடிகர் மாதவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இயற்கை விவசாயத்தின் மூலம் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி, பல இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி அருகே ஒரு தரிசு நிலத்தை வாங்கிய மாதவன், அங்கு நவீன மற்றும் இயற்கை விவசாய முறைகளைக் கையாண்டார். சீக்கிரம் பலன் தரக்கூடிய 'குட்டை ரக' தென்னங்கன்றுகளை அவர் தேர்வு செய்து நட்டார். ரசாயன உரங்களைத் தவிர்த்து, முழுக்க முழுக்க இயற்கை உரங்கள் மற்றும் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி நிலத்தைப் பராமரித்தார்.

பொதுவாகத் தென்னை பலன் தர நீண்ட காலம் ஆகும் நிலையில், மாதவனின் முறையான பராமரிப்பால் மூன்றே ஆண்டுகளில் அந்தத் தரிசு நிலம் செழிப்பான தென்னந்தோப்பாக மாறியது. தற்போது அந்தத் தோப்பு முழுமையாகப் பலன் தரும் நிலைக்கு வந்ததை அடுத்து, மாதவன் அதனைப் புதிய உரிமையாளர்களிடம் விற்றுள்ளார்.
இது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், "விவசாயத்தில் ஒரு திட்டத்தைத் தொடங்கி அது வெற்றியடைவதைப் பார்ப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்தப் பழனி அனுபவம் எனக்குப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. இதே போன்ற இயற்கை விவசாயத் திட்டங்களை இந்தியாவின் பிற பகுதிகளிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்."

விவசாயம் என்பது நஷ்டமான தொழில் என்ற பிம்பத்தை உடைத்து, சரியான தொழில்நுட்பம் மற்றும் இயற்கை முறையைப் பின்பற்றினால் தரிசு நிலத்தையும் பொன் விளையும் பூமியாக மாற்றலாம் என்பதை மாதவன் நிரூபித்துள்ளார். ஏற்கனவே சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டி வரும் மாதவன், தற்போது விவசாயத்திலும் முத்திரை பதித்துள்ளது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
