நடிகர் கிங்காங் தந்தை காலமானார்; இபிஎஸ் இரங்கல்!
தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் தந்தை வி. ஏழுமலை (78), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில், நடிகர் கிங்காங்கின் இல்லத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த வி. ஏழுமலை, சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர்நீத்தார்.

மறைந்த ஏழுமலையின் உடல், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உலகமே பண்டிகையைக் கொண்டாடும் வேளையில் தந்தை மறைந்த செய்தி அறிந்து நடிகர் கிங்காங்கின் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அவரது மறைவு குறித்துத் தகவல் அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திரையுலகப் பிரபலங்கள், நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் நடிகர் கிங்காங் குடும்பத்திற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
