நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சைக்காகக் கோவை வருகை.. கங்கை மருத்துவமனையில் அனுமதி!
பிரபல தெலுங்குத் திரையுலக முன்னணி நடிகர் ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காகக் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார்.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற சண்டைக் காட்சியின் போது அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. எலும்பியல் மற்றும் கை அறுவை சிகிச்சைக்குப் புகழ்பெற்ற கோயம்புத்தூரில் உள்ள கங்கை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அவருக்குச் சிகிச்சை அளிக்கவுள்ளது. சிகிச்சையின் போது ராம் சரணுக்குத் துணையாக அவரது குடும்பத்தினர் உடனிருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கோவை வந்தடைந்த ராம் சரணுடன் அவரது தந்தையும் பிரபல நடிகருமான சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாசனா கொனிடேலா உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் வந்துள்ளனர். அவருக்கு இன்று மணிக்கட்டு அறுவை சிகிச்சை நடைபெறும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு அவர் மீண்டும் ஹைதராபாத் திரும்புவார் எனத் தெரிகிறது.
