நடிகர் ரன்வீர் சிங் மீதான தடை நீக்கம் - பணிந்தது கூட்டமைப்பு!

 
ரன்வீர் சிங் ரன்வீர் சிங்

பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த 'ஒத்துழையாமை உத்தரவு' எனப்படும் ரகசியத் தடையை, மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் இயக்கவிருந்த பாலிவுட்டின் மெகா பட்ஜெட் படமான 'டான் 3'  திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ரன்வீர் சிங் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கடந்த டிசம்பர் மாதத்தில் அப்படத்தின் திரைக்கதை திருப்தி அளிக்காதது மற்றும் பட்ஜெட் குறைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் ரன்வீர் சிங் படத்திலிருந்து திடீரென விலகினார்.

இதனால் தங்களுக்கு சுமார் ரூ.45 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம் 'FWICE' அமைப்பிடம் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், கடந்த மே 25 அன்று ரன்வீர் சிங்குடன் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் யாரும் ஒத்துழைக்கக் கூடாது என அந்த அமைப்பு மறைமுகத் தடை விதித்தது.

ரன்வீர் சிங்

இந்தத் தடையால் ரன்வீர் சிங்கின் தற்போதைய படங்கள் மற்றும் விளம்பரப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதையடுத்து, அமைதியாக இருந்த ரன்வீர் சிங், தனது வழக்கறிஞர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை 'FWICE' அமைப்பிற்கு அதிரடியாக ஒரு சட்டபூர்வ நோட்டீஸ் (Legal Notice) அனுப்பினார். அதில், ஒரு தனிநபரின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்க தொழிற்சங்கத்திற்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்பதை வலுவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரன்வீர் சிங்கின் இந்த அதிரடி சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பாலிவுட்டின் முன்னணி அமைப்புகளான 'CINTAA' (நடிகர்கள் சங்கம்) மற்றும் 'IMPPA' (தயாரிப்பாளர்கள் சங்கம்) ஆகியவையும் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாகக் களம் இறங்கின. அண்மைக்காலமாகப் பாலிவுட் படங்கள் தோல்வியடைந்து வந்த நிலையில், ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படம் ரூ.1300 கோடிக்கு மேல் வசூலித்து ஒட்டுமொத்த சினிமா தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் தந்துள்ளதைச் சுட்டிக்காட்டி தடையை நீக்க வலியுறுத்தின.

ரன்வீர் சிங்

இதையடுத்து நேற்று மும்பையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த FWICE தலைவர் பி.என்.திவாரி, "திரைத்துறையின் நலன் கருதியும், பிற சினிமா அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றும் ரன்வீர் சிங்கிற்கு எதிரான ஒத்துழையாமை உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறுகிறோம். இதில் யாரும் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை. அவரது லீகல் நோட்டீஸிற்கு எங்கள் சட்டத்துறை முறைப்படி பதிலளிக்கும்" என்று கூறி தடையை நீக்கியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஒரு வார காலமாகப் பாலிவுட்டை உலுக்கி வந்த 'ரன்வீர் சிங் தடை விவகாரம்' தற்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ரன்வீர் சிங் ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.