டெல்லி போராட்டம் குறித்து இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் டொவினோ தாமஸ்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் மற்றும் கல்வி உரிமைக்காகத் டெல்லியில் அமைதியான முறையில் போராடி வரும் இளைஞர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது ஆதரவுக் குரலை எழுப்பியுள்ளார். அமைதி வழியில் குரல் எழுப்பும் இளைஞர்களை அடக்குவது நாட்டின் எதிர்காலத்தையே முடக்குவதற்குச் சமம் என அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டொவினோ தாமஸ், தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

"நாட்டின் வருங்கால தலைமுறையினரின் நியாயமான குரல்கள் அடக்குமுறையால் நசுக்கப்படும் போது, அந்த தேசத்தின் எதிர்காலமே நசுக்கப்படுகிறது. அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை அணுக வேண்டிய முறை நிச்சயம் இதுவல்ல" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "அமைதியாகப் போராடிய மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் பொதுச்சொத்துகளுக்கோ அல்லது யாருக்காவது பாதிப்பையோ ஏற்படுத்தினார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்வது அச்சுறுத்தல் அல்ல; மாறாக அதுவே ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடும் அனைவருக்கும் எனது முழுமையான ஆதரவு உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

"எனது அரசியல் என்பது மனிதநேயம்; எனது நம்பிக்கை என்பது அமைதி" என்ற வரிகளுடன் தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார். டெல்லியில் மாணவர்கள் சந்தித்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தென்னிந்தியத் திரைத்துறையைச் சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் குரல் கொடுத்துள்ளது, தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
