விவாகரத்து வழக்கில் நடிகர் விஜய் காணொலி மூலம் ஆஜராக திடீர் மனு... !
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு தற்போது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு தமிழக அரசியலிலும் சினிமாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணொளி காட்சி வாயிலாக விசாரணையில் கலந்து கொள்ள அனுமதி கோரி அவர் விடுத்துள்ள இந்த கோரிக்கை சட்ட வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. நேரில் வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடும் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர்.

விஜய் மீது சங்கீதா சுமத்தியுள்ள பல்வேறு புகார்கள் குறித்து இந்த விசாரணையில் விவாதிக்கப்பட உள்ளதால், நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சங்கீதா ஏற்கனவே தற்காலிகமாக தங்குவதற்கு வீடு மற்றும் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விஜய்யின் இந்த காணொளி காட்சி கோரிக்கை வழக்கை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற உள்ள அடுத்த விசாரணையில், விஜய்யின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளிக்குமா என்பது தெரிந்துவிடும்.
