நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 
சிங்காரவேலன் விமல்

காசோலை மோசடி வழக்கில் பிரபலத் தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துச் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகர் விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' திரைப்படத் தயாரிப்பின் போது இந்த நிதிப் பிரச்சனை தொடங்கியது:  'மன்னர் வகையறா' படத்தை தயாரிப்பதற்காக சினிமா பைனான்சியரான கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடனாகப் பெற்றிருந்தார்.

பெற்ற கடனை அடைப்பதற்காக விமல் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், நிதி நிறுவன அதிபர் கோபி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விரிவாக விசாரித்த சென்னை நீதிமன்றம், காசோலை மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கியது.

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், கடனாகப் பெற்ற தொகையை முறைப்படி திருப்பி அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விமலுக்கு ஏதுவாக, அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.