கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி.. "விஜய் கூட நடிச்ச காட்சிகளை நீக்கிட்டாங்க”
முதலமைச்சர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், தான் நடித்த காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறி நடிகை ஆனந்தி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த பின், தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்ட நடிகை ஆனந்தி, "விஜய் சார் கூட நான் இணைந்து நடித்த காட்சிகளைத் திரையில் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும் தியேட்டருக்குச் சென்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், படத்தின் நீளம் காரணமாக எடிட்டிங்கின் போது அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் திரைத்துறை விலகலைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோவில், "படத்தில் என் காட்சிகள் கட் செய்யப்பட்டது ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், இனிமேல் அவர் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்பதால், வருங்காலத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கவே முடியாது என்ற எண்ணம்தான் என்னை மிகவும் காயப்படுத்துகிறது" எனப் பேசி வீடியோவில் கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகையாகவும் உடன் நடித்த நடிகையாகவும் ஆனந்தி வெளியிட்ட இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
