நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது - என்ன காரணம்?!
தூத்துக்குடி அருகே சின்னத்திரை மற்றும் திரைப்படத் துணை நடிகை தீபாவின் தந்தை மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (70). இவர் பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்படத் துணை நடிகையான தீபாவின் தந்தை ஆவார். புலவர் கணேசன் இன்று காலை முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு தேநீர்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கணேசனுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனைச் சரமாரியாக வெட்டித் தாக்கினர். இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த கணேசன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் பகுதியில் நடந்த இந்த கொடூரச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். கணேசனை வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து, படுகாயமடைந்த கணேசனை மீட்ட அங்கிருந்தவர்கள், சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இருதரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
