'அவதார்' படத்திற்கு எதிராக நடிகை வழக்கு! - ஜேம்ஸ் கேமரூன் அதிர்ச்சி!

 
அவதார் அவதார்

உலக அளவில் பல்லாயிரம் கோடிகளை வசூலித்துச் சாதனை படைத்த 'அவதார்' திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் டிஸ்னி நிறுவனத்திற்கு எதிராக, நடிகை கொரியன்கா கில்ச்சர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவதார் படத்தில் வரும் 'நெய்திரி' என்ற நீல நிறக் கதாபாத்திரத்தின் முகம் மற்றும் உடல் மொழி, தனது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கொரியன்கா குற்றம் சாட்டியுள்ளார்.

அவதார்2

கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘தி நியூ வேர்ல்டு’ திரைப்படத்தில் கொரியன்கா நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது தோற்றம், மேக்கப் மற்றும் முக பாவனைகளை அப்படியே பிரதிபலிக்கும் விதமாகவே 'நெய்திரி' கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அனுமதியோ அல்லது முறையான ஒப்பந்தமோ இல்லாமல், தனது தனித்துவமான அடையாளத்தைப் பயன்படுத்தியதற்காக அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவதார்

வெறும் நஷ்டஈடு மட்டுமின்றி, அவதார் படத்தின் பிரம்மாண்ட லாபத்தில் தனக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக இந்த ரகசியம் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்டதாகவும், தற்போது தொழில்நுட்ப ரீதியாக இதனை நிரூபிக்கத் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேம்ஸ் கேமரூன் மற்றும் டிஸ்னி நிறுவனம் தரப்பில் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனினும், ஒரு கதாபாத்திரத்தின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு, ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.