நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மதிப்பிலான நில மோசடி.. தலைமறைவாக இருந்த பில்டர் அழகப்பன் கைது!

 
கெளதமி அழகப்பன்

நடிகை கெளதமியிடம் ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்களை மோசடி செய்த வழக்கில், கேரளாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி பில்டர் அழகப்பன் உள்ளிட்ட மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2004-ல் புற்றுநோய் சிகிச்சையின் போது, தனது மகளின் எதிர்காலத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராமநாதபுரம் நிலங்களை விற்கக் குடும்ப நண்பரும் கட்டுமான அதிபருமான சி. அழகப்பனிடம் கவுதமி பவர் ஆஃப் அட்டர்னி வழங்கியிருந்தார்.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, கவுதமியின் கையொப்பங்களைப் போலியாகச் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துகளைத் தங்களது பெயர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அழகப்பன் குடும்பத்தினர் மாற்றிக் கொண்டனர்.

கவுதமி கெளதமி

சென்னை மத்திய குற்றப்பிரிவில் கவுதமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தேடப்பட்டு வந்த அழகப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் கேரளாவுக்குத் தப்பிச் சென்றனர். தனிப்படை போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அழகப்பன் உட்பட 3 பேரையும் நீதிபதி உத்தரவின் பேரில் புழல் மத்திய சிறையில் காவலில் அடைத்தனர்.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து, அழகப்பனுக்குச் சொந்தமான சென்னை மற்றும் மதுரை இல்லங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.