கார் விபத்தில் நடிகை ஹர்ஷில் காலியா உயிரிழப்பு.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது!

 
ஹர்ஷில் ஹர்ஷில்

ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ந்து வரும் இளம் நடிகையும், மாடலுமான ஹர்ஷில் காலியா, ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் கடந்த மார்ச் 23ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். 30 வயதே ஆன அவரது மறைவு ராஜஸ்தான் கலைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில் விபத்து நிகழ்ந்தது. ஹர்ஷில் காலியா தனது தோழியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதியது. டிவைடரில் மோதிய வேகத்தில் கார் அப்படியே தலைகீழாகப் புரண்டது. இதில் ஹர்ஷில் காலியாவிற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காரை நிமிர்த்தி அவரை மீட்டனர். உடனடியாக ஜெய்ப்பூரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில் கார் வேகமாக வந்து டிவைடரில் மோதுவதும், அடுத்த நொடியே இடதுபுறமாகச் சாய்ந்து தலைகீழாகப் புரளுவதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹர்ஷில் காலியா, திறமையான நடிகை மட்டுமல்லாமல், மாடல் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான 'Crime Next Door' என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும், பல ராஜஸ்தானி ஆல்பம் பாடல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2021-ம் ஆண்டு நடந்த 'மிஸ் திவா ராஜஸ்தான்' போட்டியில் முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றவர்.

ஹர்ஷில்

கார் அதிக வேகத்தில் சென்றதா அல்லது வேறு ஏதேனும் வாகனம் குறுக்கே வந்ததால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து சிப்ரா பாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரது தந்தை ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.