“கர்ப்பம் தரிப்பது பல பெண்களுக்கு சவாலாக மாறியுள்ளது” - நடிகை குஷ்பு வேதனை!
சென்னை தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், இன்றைய காலத்தில் தாய்மை அடைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆன முதல் மாதத்திலேயே "எப்போது குழந்தை?" என்று கேட்கும் பழக்கத்தை சமூகம் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், ஒரு தம்பதி எப்போது குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய துரித வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், முறையற்ற தூக்கமின்மை, அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளால் கர்ப்பம் தரிப்பது பல பெண்களுக்குச் சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாகத் தாயாக முடியாத சூழல் ஏற்படும்போது அதன் பழியைப் பெண்ணின் மீது மட்டுமே சுமத்துவது வேதனையானது என்றார்.
ஒரு காலத்தில் ஐவிஎஃப் சிகிச்சையைச் சமூகம் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்த நிலையில், தற்போது குழந்தைபேறு இல்லாத தம்பதிகளுக்கு அது மிகச் சிறந்த மற்றும் அவசியமான மருத்துவ உதவியாக மாறியுள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தனது இரண்டு கர்ப்ப காலங்களையும் தாம் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்ததாகக் குறிப்பிட்ட அவர், குழந்தையின் முதல் அசைவை உணர்ந்த தருணம், முதல் ஸ்கேனில் குழந்தையின் உருவத்தைப் பார்த்த பொழுதெல்லாம் தமக்குக் கிடைத்த மகிழ்ச்சி வாழ்நாளில் மறக்க முடியாதவை என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
