"திமுகவில் இருந்து இதனால் தான் வெளியேறினேன்" - மதுரையில் நடிகை குஷ்பு ஆவேசம்!

 
குஷ்பு குஷ்பு

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக அரசு மற்றும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

"எங்களைப் பார்த்து 'சினிமா சங்கி' என்றும், 'கட்சி விட்டு கட்சி தாவுபவர்' என்றும் அமைச்சர் பி.டி.ஆர். கூறுகிறார். திமுகவில் யாரும் கட்சி மாறவில்லையா? நான் திமுகவில் இருந்து வெளியேறியதற்கு எனது சுயமரியாதை தான் காரணம்" என்று குஷ்பு விளக்கமளித்தார்.

சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு !

"30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என அமைச்சர் ஏன் வழக்கு தொடரவில்லை? அப்படியானால் அந்த ஆடியோவில் இருப்பது உண்மைதானே?" என மீண்டும் அந்தப் பழைய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எச்சரிக்கை வீடியோ ஒரு முதல்வருக்கு அழகல்ல என்றும், அது குறித்து அவர் பேசுவது தவறாகத் தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குப் பின்னால் பெரும் கூட்டம் கூடுகிறது. அந்தப் பலம் என்ன என்பது மே 4-ஆம் தேதி (தேர்தல் முடிவுகள்) தெரியும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஷ்பு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என வினவிய அவர், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஏன் இன்னும் தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று கேட்க முதல்வருக்குத் தைரியம் உண்டா என்றும் சாடினார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தனிநபர் விமர்சனங்கள் மற்றும் பழைய ஆடியோ சர்ச்சைகள் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளன. குறிப்பாக, பாஜக - திமுக இடையே தொகுதி மறுவரையறை மற்றும் நிதி மேலாண்மை குறித்த வார்த்தை போர் முற்றியுள்ளது.