சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா சிறப்பு வழிபாடு!
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’ திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'மூக்குத்தி அம்மன்-2' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டி, நடிகை நயன்தாரா சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவிலுக்கு இன்று நேரில் சென்று சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஊர்வசி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் இருந்த தடைகள் நீங்குவதற்காக நடிகை நயன்தாரா சிறப்பு விரதம் இருந்து, பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலிலும் வேண்டி வழிபட்டதாக இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருந்தார். பண்டிகைக் காலத்தில் திரைக்கு வரவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
