‘ரோஜா’ பட நடிகை... 60 வயதில் திரையுலகில் அறிமுகம்... நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பாசமிக்க பாட்டியாகவும், குடும்ப மூத்த உறுப்பினராகவும் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரை உலகினரிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தொடங்கி சென்னை வரை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வளர்ந்த இவர், திருமணத்திற்குப் பிறகு 1953-இல் சென்னையில் குடியேறினார். தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற இயக்குநர் கே. பாலசந்தர் இவருக்கு அதே அலுவலகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஆவார்.
அலுவலகப் பணிக்கு இடையே 'ரசிக ரங்கா' நாடகக் குழுவில் இணைந்து நடித்த இவர், சுமார் 25 ஆண்டுகளில் 450-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துத் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். மேடை நாடகங்களில் இவரது இயல்பான நடிப்பைக் கண்ட இயக்குநர் மணிரத்னம், 1992-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் மதுபாலாவின் பாட்டியாக நடிக்க வாய்ப்பளித்தார். அப்போது இவருக்கு வயது 60.
'ரோஜா' படத்தைத் தொடர்ந்து 'சதி லீலாவதி' (அம்புஜம் மாமி), 'ரிதம்', 'அந்நியன்' (அம்பியின் பாட்டி), 'மொழி' (அர்ச்சனாவின் பாட்டி) போன்ற பல வெற்றிப் படங்களிலும், பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொடரிலும் நடித்துத் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தார்.
'சித்தி', 'ஆனந்தம்', 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட பிரபலத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பாசமான பாட்டியாக நடித்து வீடுகள் தோறும் அறியப்பட்ட முகமானார். 2003-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடூர விபத்தில் இவரது இரண்டு கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் கைத்தடியின் உதவியுடனே நடமாடும் சூழல் உருவானது.
1996-இல் கணவரின் மறைவு, அதனைத் தொடர்ந்து மூத்த மகனின் இழப்பு எனத் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்தடுத்துப் பல சோதனைகளைச் சந்தித்த போதிலும், வாசிப்பு, சுடோகு விளையாட்டு மற்றும் நேர்மறை எண்ணங்கள் மூலம் தனது இறுதிக்காலம் வரை மன உறுதியுடன் வாழ்ந்து காட்டினார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. "கலைக்கு வயது தடையில்லை" என்பதற்குத் தன் வாழ்வையே பாடமாக வாழ்ந்து மறைந்துள்ள வத்சலா ராஜகோபாலின் நினைவுகள் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் வழியாக என்றும் நிலைத்திருக்கும்.
