தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

 
பிரியங்கா மோகன் பிரியங்கா மோகன்

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா மோகனை, தென் கொரிய அரசு அந்நாட்டின் சுற்றுலாத்துறைக்கான இந்தியத் தூதராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் இந்தியா வந்திருந்தார். அப்போது இந்திய ஜனாதிபதி மாளிகையில் தென் கொரிய அதிபருக்கு அளிக்கப்பட்ட உயரிய அரசு முறை விருந்தில் பங்கேற்க நடிகை பிரியங்கா மோகனுக்குப் பிரத்யேக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தின் போது அவர் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

மாளவிகா மோகனன்

தென் கொரியாவை மையமாகக் கொண்டு, அந்நாட்டிலேயே முழுமையாகப் படமாக்கப்பட்ட ‘மேட் இன் கொரியா’ என்ற திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இத்திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இரு நாட்டு கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் முக்கியக் காரணியாக அமைந்தது. இந்த அசாத்திய வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே அவருக்கு ஜனாதிபதி மாளிகை விருந்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் அடுத்தகட்ட நகர்வாக, இந்திய சுற்றுலாப் பயணிகளைத் தென் கொரியாவை நோக்கி ஈர்க்கும் வகையிலும், இரு நாடுகளுக்கு இடையேயான கலை மற்றும் சுற்றுலாத் துறை உறவுகளை வலுப்படுத்தும் வகையிலும் நடிகை பிரியங்கா மோகனைத் தங்களது நாட்டின் சுற்றுலாத்துறை தூதராக தென் கொரிய அரசு தற்போது நியமித்துள்ளது.

மாளவிகா மோகனன்

இந்தியத் திரைத்துறையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகைக்கு தென் கொரிய அரசு இத்தகைய உயரிய கௌரவத்தை வழங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையேயும், இந்தியத் திரையுலகினரிடையேயும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.