அம்பிகா மீதான ரூ.46 கோடி காசோலை புகார்... போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா !
நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது ரூ.46 கோடி அளவிலான காசோலை மோசடி புகார் அளித்த நடிகை ராதா, போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.தமிழ் சினிமாவில் சகோதரிகளாக பல ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

தனது வீட்டில் இருந்த பழைய கையெழுத்திட்ட காசோலைகளை தனது அனுமதியின்றி பயன்படுத்தி சுமார் ரூ.46 கோடி அளவுக்கு பணம் பெற முயற்சி செய்ததாக ராதா தனது புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து புகார்தாரரான ராதாவிடம் விரிவான வாக்குமூலம் பெறுவதற்காகவும், வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை பெறுவதற்காகவும் செப்டம்பர் 24-ந் தேதி நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நாளில் ராதா போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. தான் பணி நிமித்தமாக தற்போது வெளியூரில் இருப்பதாகவும், எனவே வேறு ஒரு நாளில் நேரில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும் ராதா தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராதாவின் குற்றச்சாட்டுகளை நடிகை அம்பிகா மறுத்துள்ளார். குடும்ப சொத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ராதாவே சில காசோலைகளை தங்களுக்கு வழங்கியதாக அம்பிகா கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறுபட்ட விளக்கங்களை அளித்து வருகின்றனர்.ரூ.46 கோடி காசோலை புகார் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ராதா அடுத்ததாக எப்போது போலீசார் முன்பு ஆஜராகிறார் என்பதும், அவர் அளிக்கும் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை எந்த திசையில் செல்கிறது என்பதும் கவனம் பெற்றுள்ளது.
