நடிகையிடம் பாலியல் அத்துமீறல்... இயக்குநர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேச கும்பமேளா மூலம் புகழ்பெற்ற அழகி மோனலிசா, இந்தித் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது 'மணிப்பூர் டைரி' திரைப்படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது மிகக்கடுமையான பாலியல் புகாரைப் பதிவு செய்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி, அந்த இயக்குநர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும், அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அவர் தனது புகாரில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நடிகை மோனலிசா, நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜராகி தனது ரகசிய வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது காவல்துறையினர் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகி, சமூக ஊடகங்கள் வாயிலாகத் தன்னைத் தொடர்ந்து அவதூறு செய்து வருவதாகவும் அந்த நடிகை தனது புகாரில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

திரைப்பட வாய்ப்புக்காகப் பெண் பிரபலங்கள் இது போன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவது இந்தித் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாருக்குள்ளான இயக்குநர் சனோஜ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தப் போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியது குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
