நடிகை சுருதிஹாசன் குறித்த ஆபாச வீடியோக்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல நடிகை சுருதிஹாசனின் அனுமதி இல்லாமல் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டீப்பேக் மற்றும் போலி ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதிஹாசனின் புகைப்படம் மற்றும் தோற்றத்தை வணிக நோக்கத்தில் சிலர் தவறாகப் பயன்படுத்தினர். மேலும், அவரது டீப்பேக் மற்றும் போலி ஆபாசப் படங்களைச் சமூக வலைதளங்களில் பரப்பியதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்கக் கோரியும், ரூ.15 கோடி இழப்பீடு கோரியும் கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட 18 நிறுவனங்களுக்கு எதிராக அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், சுருதிஹாசனின் நற்பெயருக்கும் கண்ணியத்திற்கும் இந்த டீப்பேக் வீடியோக்கள் ஈடுசெய்ய முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இணையத்தில் பரவும் இத்தகைய போலி வீடியோக்கள் தனிப்பட்ட உரிமைகளைப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

சுருதிஹாசன் தொடர்பான அனைத்து டீப்பேக், போலி ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
