நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தை கொலை வழக்கு - 9 பேர் கொண்ட கும்பல் கைது!
சூர்யா நடித்த 'மாயாவி' திரைப்படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணுப்பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் (73). இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனது பங்களாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 20ம் தேதி இரவு, சுற்றுலாப் பயணிகள் போல பங்களாவிற்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கித் துணியால் கட்டிப்போட்டுள்ளனர். சூரிய நாராயணனை நாற்காலியில் அமர வைத்து, அவரது முகம் மற்றும் உடல் முழுவதையும் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி இறுக்கியுள்ளனர். இதில் மூச்சுத் திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் தடயங்களை மறைக்க அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் ஹார்டு டிஸ்க்கையும் அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது. கொலை தொடர்பாகத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், தற்போது சென்னை, அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

வெறும் நகை, பணத்திற்காக மட்டும் இந்த கொலை நடக்கவில்லை; சொத்து பத்திரங்களைக் கைப்பற்றவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஹவாலா மற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நீடிக்கிறது.
அனுமதியின்றித் தங்கும் விடுதியாகச் செயல்பட்டு வந்த பங்களாவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ அனுமதி குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
