மசாஜ் சென்டரில் நடிகையின் 2 சவரன் தாலிச் செயின் மாயம் - காவல் நிலையத்தில் புகார்!

 
வினோதினி

சென்னையில் உள்ள பிரபல மசாஜ் சென்டர் ஒன்றிற்குச் சென்ற சின்னத்திரை நடிகை வினோதினியின் 2 சவரன் தாலிச் செயின் மாயமான சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை வினோதினி, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் பிரபல மசாஜ் சென்டர் ஒன்றிற்குச் சென்றுள்ளார். மசாஜ் சிகிச்சையின் போது தனது கழுத்தில் இருந்த சுமார் 2 சவரன் எடையுள்ள தாலிச் செயினைக் கழற்றி, அங்குள்ள அறையில் இருந்த பாதுகாப்புப் பெட்டியில் வைத்துள்ளார். மசாஜ் முடிவடையும் தருவாயில், அவரது குடும்பத்தில் திடீரென ஒரு துக்க நிகழ்வு நிகழ்ந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பதற்றமடைந்த நடிகை வினோதினி, அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வினோதினி

குடும்பத் துக்க நிகழ்வு காரணத்தால் அவரால் உடனடியாக நகையைப் பற்றி யோசிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகே தனது தாலிச் செயின் மசாஜ் சென்டரிலேயே விடுபட்டது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 9-ம் தேதி அந்த மசாஜ் சென்டருக்குச் சென்று தனது நகையைக் கேட்டபோது, அங்கிருந்த ஊழியர்களிடமிருந்து முறையான அல்லது தெளிவான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மசாஜ் சென்டர் ஊழியர்களின் பதிலில் சந்தேகமடைந்த நடிகை வினோதினி, இது குறித்து உடனடியாக அருகில் உள்ள தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வினோதினி

நடிகை வினோதினி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மசாஜ் சென்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவத்தன்று பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் மசாஜ் சென்டர் நிர்வாகிகளிடம் நகையைக் திருடியது யார் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.