அடேங்கப்பா... ரூ.9.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு!

 
தங்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலைய சரக்கு வளாகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தினர் நடத்திய சோதனையில், சுமார் 9.5 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்படும் பயணப் பெட்டிகள் மற்றும் சரக்குகள் விமான சரக்கு வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அங்கிருந்து உரிய முகவரிகளுக்கு விநியோகிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு வந்த ஒரு பெட்டியில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. 

திருவனந்தபுரம் ஏர்போர்ட்

இதனைத் தொடர்ந்து, டி.ஆர்.ஐ. அதிகாரிகள் அங்கு தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விமான சரக்கு வளாகத்தின் முகவரான சுரேந்திரன் மற்றும் அதன் ஊழியரான அரோல்ட் எம் பிலிப் ஆகியோர் பொதியிலிருந்து தங்கத்துடன் வளாகத்தை விட்டு வெளியே வந்தபோது அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

தங்கம்

பிடிக்கப்பட்ட தங்கம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கியத் தங்க வியாபாரிகளுக்காகக் கடத்தி வரப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கடத்தல் நெட்வொர்க்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள முக்கியக் புள்ளிகள் குறித்தும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.