"ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை" - கே.பி.முனுசாமி எச்சரிக்கை!

 
முனுசாமி முனுசாமி

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே புதிய அரசியல் மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாகத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகளுக்கு, அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தனது கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளார்.

அதிமுக தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவிலிருந்து மாற்றுக்கட்சிக்கு நிர்வாகிகள் செல்வது குறித்து விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி

அரசியல் களம் என்று வந்துவிட்டால் மாற்றுக்கட்சியினரையும், தங்களது அரசியல் எதிரிகளையும் கொச்சைப்படுத்திப் பேசுவது முறையல்ல. இத்தகைய செயல்களைத் தவெகவினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிமுகவின் உண்மைத் தொண்டர்களையும், கட்சியின் பாரம்பரியத்தையும் குறைத்து மதிப்பிட்டுப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசப்பட்ட விமர்சனங்களுக்குக் கே.பி.முனுசாமி மிகவும் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். "அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பேப்பரில் மட்டும்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். இப்படித் தான்தோன்றித்தனமாகப் பேசி வரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை. அதிமுக குறித்துப் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும்."

ஆதவ்

மேலும், அதிமுக குறித்து அவதூறாகவும் கொச்சைப்படுத்தியும் பேசுவதை நிறுத்தத் தவறினால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அதிமுக சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தவெகவின் புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி வார்த்தைப் போர் தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.