"துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜுனா கூறினார்” - சீமான் பேச்சு!

 
சீமான் விஜய்

தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் துணை முதலமைச்சர் பதவி மற்றும் வேளாண் துறை அமைச்சர் பதவி வழங்குவதாக ஆதவ் அர்ஜுனா தன்னிடம் பேரம் பேசியதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீமான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் தமக்குத் துணை முதலமைச்சர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜுனா தன்னிடம் பேசியதாகக் குறிப்பிட்டார். அதற்குத் தான் சம்மதிக்காததால், பின்னர் வேளாண் துறை அமைச்சர் பதவியைத் தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதைத் தான் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

சீமான்

விமர்சனங்கள்: தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிச் சண்டை போட்டதைச் சட்டமன்றத்தில் செய்ய வேண்டாம் என்று விமர்சித்ததுடன், குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசுபவர்கள் தலைவர்கள் ஆக முடியாது என்றும், குறிக்கோளுடன் பேசுபவர்கள்தான் உண்மையான தலைவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

வாகனத்தில் பயணித்தபோது காங்கிரஸ் கட்சியைக் கூடச் சேர்த்துக்கொள்ளலாமா என்று தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், ஊழல் மற்றும் லஞ்சத்தை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து அவர்கள் விவாதித்ததாகவும் சீமான் தெரிவித்தார். இருப்பினும், அத்தகைய நோக்கம் தலைவர்களிடம் இருந்தாலும் கட்சியினரிடம் இல்லை எனக் குறிப்பிட்டார்.