அபுதாபியில் உலக நாடுகளின் எரிசக்தி சங்கமம் - 2,260 நிறுவனங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கண்காட்சி

 
அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச நிகழ்வு நவம்பர் 5ஆம் தேதி நிறைவடைகிறது.

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் (ADNEC) நடைபெறும் இந்த நிகழ்வில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகள் தங்களுக்கென பிரத்யேக அரங்குகளை அமைக்கின்றன. மொத்தம் 2,260 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் 170-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2.39 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவில் அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் அல் ஜாபர் சிறப்புரையாற்றுகிறார். எரிசக்தித் துறையின் எதிர்காலத் திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட உள்ளன.

உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பதால் அபுதாபி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.