தமிழகம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை: பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக பயணம்!

 
ஈஷா

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் மிக உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை ஈஷாவிற்கு நேரில் வர இயலாத பக்தர்கள், தங்கள் ஊரிலேயே ஆதியோகியை தரிசிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் இந்த ரத யாத்திரையைத் தொடங்கி வைத்துள்ளனர். பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதீனம் ஆகியோர் மேற்கு மண்டல ரதத்தையும், தருமபுரம் ஆதீனம் தெற்கு மண்டல ரதத்தையும், தொண்டை மண்டல ஆதீனம் வடக்கு மண்டல ரதத்தையும் முறைப்படி தொடங்கி வைத்து ஆசி வழங்கியுள்ளனர். இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் 7 அடி உயர ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு யாத்திரையின் சிறப்பம்சமாக, தமிழகம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக ரதம் பயணிக்கிறது. இதுவரை மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவாரூர் தியாகராஜர் மற்றும் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முக்கியத் தலங்களை கடந்து வந்துள்ளது. சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த ரதங்கள், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளன.

திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென்கைலாய பக்தி பேரவை அடியார்கள் யாத்திரை குறித்த விவரங்களை வெளியிட்டனர். அதன்படி, ஜனவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மொத்தம் 3 நாட்கள் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.

மாநகர் பகுதிகளில் சாஸ்திரி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், டோல்கேட் மற்றும் உத்தமர் கோவில் வழியாக ரதம் பயணிக்கிறது. தொடர்ந்து சமயபுரம், வயலூர், திருவெறும்பூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கும் ரதம் செல்ல உள்ளது. புதுக்கோட்டை வழியாக நாளை இரவு திருச்சிக்கு ரதம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15-ஆம் தேதி கோவையில் மஹாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சியில் உறையூர் ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் விழாவின் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், ‘சிவ யாத்திரை’ என்ற பெயரில் 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை நோக்கிப் பயணிக்க உள்ளனர். ரதம் வரும் இடங்களில் பக்தர்கள் தீபாராதனை காட்டியும், நைவேத்தியங்கள் படைத்தும் ஆதியோகியை வரவேற்று வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.