என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை... மாணவர்கள் தேர்வு செய்ய இன்றே கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு துணை கலந்தாய்வில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
2026-27 ஆம் கல்வியாண்டுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 1 லட்சத்து 44 ஆயிரத்து 295 பி.இ. மற்றும் பி.டெக். இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 56 ஆயிரத்து 530 இடங்கள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 17 முதல் 31 வரை நடைபெற்றது. இதில் 14 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மாணவ-மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். துணை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்விப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை இன்று மாலை 5:00 மணி வரை இணைய வழியில் தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
