அனுமதி இலவசம்... சென்னையில் 23,000 விநாயகர் சிலைகளுடன் பிரம்மாண்டக் கண்காட்சி தொடக்கம்!

 
விநாயகர் சித்தி புத்தி சதுர்த்தி பிள்ளையார்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிலைகளுடன் கூடிய இருபது ஆண்டு காலச் சிறப்பு வாய்ந்த விநாயகர் கண்காட்சி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி ராம் கணேஷ் மஹாலில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கியுள்ள இந்தக் கண்காட்சி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை 10 நாட்களுக்குப் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

விநாயகர் சித்தி புத்தி சதுர்த்தி பிள்ளையார்

குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்தச் சேகரிப்புப் பணியைச் செய்து வருகிறார். இந்த ஆண்டிற்கான கண்காட்சியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் த.சரத்குமார் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

மனிதனின் அன்றாட வாழ்வியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இதில், டென்னிஸ் விளையாடும் விநாயகர், அருவியில் குளிக்கும் விநாயகர், தாயின் கருவறையில் இருப்பது போன்ற வடிவம், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நிலாவில் இருக்கும் விநாயகர் மற்றும் 10 அடி உயர அரச மர வேர்களால் ஆன பசுமை விநாயகர் எனப் பல்வேறு கற்பனை வடிவத்திலான சிலைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மலைக்கோட்டை விநாயகர் கோயில் மினியேச்சர் வடிவங்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சித்தி புத்தி சதுர்த்தி பிள்ளையார்

அனைத்துத் தரப்பு மக்களும் விநாயகர் தரிசனம் பெறும் வகையில் அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்தக் கண்காட்சியைச் சென்று பார்வையிடலாம்.