குதிரை மேய்ந்த தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை... அதிமுக நிர்வாகி மகன் கைது!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள மேல்மலை பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ராமர். இவர் வளர்த்து வந்த குதிரை ஒன்று, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ஜெயபாலின் மகன் 23 வயதான ரகு என்பவரது தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு நீண்ட நாட்களாக முன்விரோதம் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த மனக்கசப்பு காரணமாக ரகு மற்றும் ராமர் இடையே மீண்டும் தகராறு வெடித்துள்ளது.

இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த ரகு, ராமரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். அப்போது ராமரைக் காப்பாற்ற வந்த அவரது நண்பருக்கும் வெட்டு விழுந்து பலத்த காயமடைந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொடைக்கானல் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகியின் மகன் ரகுவை காவல் துறையினர் கைது செய்தனர்.

வாலிபர் படுகொலை செய்யப்பட்ட செய்தி பரவியதால் ஆத்திரமடைந்த ராமரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியின் வீட்டைச் சூறையாடிய அவர்கள், அங்கிருந்த இருசக்கர வாகனத்திற்கும் தீ வைத்துத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் பூம்பாறை கிராமத்தில் பதற்றம் நிலவியதை அடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்கக் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
